Thursday 20 December 2012

தூக்கி விட்ட நம்பிக்கை: சிறுகதை - புலேந்திரன்

நீலகிரி மலையில் வாழும் மான்குட்டி மாலுவுக்கு பிறந்தநாள் விழா. பக்கத்து மலையில் உள்ள முயல்குட்டி முத்து, கரடிக்குட்டி கருப்பன், பூனைக்குட்டி மீனு ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தது மாலு.

வீட்டிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிட்டது முயல்குட்டி முத்து. பாட்டுப் பாடிக்கொண்டே ஜாலியாக போய் கொண்டிருந்தபோது பாசி படர்ந்திருந்த பாறையில் கால் வைத்து வழுக்கி குழிக்குள் விழுந்தது முத்து. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. பயத்தில் முத்துவின் இதயம் 'லப்டப்' 'லப்டப்' என்று மிக வேகமாக துடித்தது. யாராவது வந்து உதவி செய்வார்கள் என்ற நினைப்பில் குழிக்குள்ளேயே படுத்திருந்தது. ஆனால், யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. அந்த வழியில் செல்பவர்கள் எல்லாம் முத்துவை பரிதாபமாக பார்த்து விட்டு சென்றுவிட்டனர்.
...Continue Reading

'சரி, யாரிடமாவது நாமே உதவி கேட்கலாம்' என்று எண்ணிய முத்து தலையை சற்று உயர்த்தி நோட்டமிட்டது. அதன் கண்ணில் நரி தென்பட்டது.

"குழிக்குள் விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். எழ முடியவில்லை... என்னை தூக்கிவிடு" என்றது முத்து.

"என் கை சுளுக்கி விட்டது. கையைக்கூட நீட்ட முடியவில்லை. வேறு யாரையாவது பார்..." என்று சொல்லிவிட்டு நடையை கட்டியது நரி.

சற்று நேரத்தில் யானை வந்து குழியை எட்டிப் பார்த்தது.

"அண்ணே, என்னை மேலே தூக்கி விடுங்க. ப்ளீஸ்!" என கெஞ்சியது முத்து.

"என் துதிக்கையில் முள் குத்திவிட்டதுடா தம்பி! என்னால் எதுவுமே செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு யானையும் போய்விட்டது.

உதவி செய்ய மனமில்லாத அந்த விலங்கு களின் மீது முத்துவுக்கு வெறுப்பு உண்டானது.

'இனி என்ன செய்வது?' என்று சிந்தனையில் முத்து ஆழ்ந்திருந்தபோது, "விழுந்துட்டியா..?" என்றொரு குரல் கேட்டு தலையை தூக்கிப் பார்த்தது முத்து.

மேலே கரடிக்குட்டி கருப்பன் நின்று கொண்டிருந்தது.

"மாலுவோட பிறந்தநாள் விழாவுக்கு போறப்பத்தான் கால் வழுக்கி குழிக்குள் விழுந்துட்டேன். என்னை தூக்கிவிடு" என்றது முத்து.

"எனக்கொரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து உன்னை தூக்கி விடுகிறேன். அதுவரைக்கும் குழிக்குள்ளேயே இரு" என்று சொல்லிவிட்டு கரடிக்குட்டியும் 'எஸ்கேப்' ஆகிவிட்டது!

நேரம் கடந்து கொண்டேயிருந்தது.

'கருப்பனை காணவில்லையே. விழா ஆரம்பிக்க இன்னமும் அரை மணிநேரம்தானே இருக்கு...' என்று புலம்பியது முத்து.

அப்போது அங்கு வந்த பூனைக்குட்டி மீனு, குழிக்குள் எட்டிப் பார்த்தது.

"கால் வழுக்கி குழிக்குள்ளே விழுந்துட்டேன். எல்லார்கிட்டேயும் உதவி கேட்டேன். யாருமே உதவி செய்யலே. கரடிக்குட்டிகூட உதவி செய்யாமல் ஓடிப்போயிட்டான்" என்று வருத்தத்துடன் மீனுவிடம் சொன்னது முத்து.

"விழுந்தால் என்ன..? எழுந்திடலாம். உன் உடம்பில் இன்னும் சக்தி இருக்கு. நீயே முயற்சி செய். உன்னால் கண்டிப்பாக முடியும்" என்று நம்பிக்கை கொடுத்தது மீனு.

"அப்படியா, என்னால் முடியுமா?" ஆச்சரியத்துடன் கேட்டது முத்து.

"மற்றவரின் உதவிக்காக காத்திருக்கக் கூடாது. உடல் பலத்தை விடவும் உள்ளத்தின் பலமே பெரியது. மூடப்பட்ட விதை, மண்ணை கீறிக் கொண்டு முண்டியடித்து மேலே வருகிறதே! அதுபோல் நீயும் முயற்சி செய். மேலே வந்துவிடுவாய்" என்று முத்துவை இன்னும் ஊக்கப்படுத்தியது மீனு.

மீனுவின் வார்த்தைகளால் உற்சாகமடைந்த முத்து, முழுமையாக முயற்சி செய்தது. சில நிமிடங்களில் மேலே வந்து சேர்ந்தது.

"கெட்டிக்காரன்! மேலே வந்து விட்டாயே..." சிரித்துக்கொண்டே சொன்னது மீனு.

"நீ நம்பிக்கை ஊட்டியதால்தான் என் மனதுக்கே தெம்பு வந்தது. உன் வார்த்தைகளால்தான் நான் மேலே வந்தேன்" என்றது முத்து. பின்னர் இருவரும் உற்சாகமாக விழாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

விழா ஆரம்பமானது. மாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு விருந்து சாப்பிட்டனர். மீனுவும், முத்துவும் வீடு திரும்பினர். அப்போது பரபரப்புடன் ஓடி வந்தது கரடிக்குட்டி கருப்பன். வழியில் வந்து கொண்டிருந்த முத்துவை அதிர்ச்சியுடன் பார்த்தது.

"உன்னை மேலே தூக்கிவிட்டது யார்?" என்று கேட்டது கரடிக்குட்டி.

"என் தன்னம்பிக்கைதான். இந்த மீனு சொன்னதைக் கேட்டு என் மீது எனக்கே நம்பிக்கை உண்டானது. ஒரே தாவலில் மேலே வந்துவிட்டேன்" என்றது முத்து. "அப்படியா..." என்று வியந்தது கருப்பன்.

"இனி வழியில் செல்லும்போது எங்காவது வழுக்கி விழுந்துவிட்டால் என்ன செய்வாய்?" என்றது மீனு.

"உதவிக்காக காத்திருக்கமாட்டேன். இரத்தம் ஒழுகினாலும் துடைத்துக் கொண்டே எழுந்து விடுவேன்" என்று சொல்லிவிட்டு கம்பீரமாகச் சென்றது முத்து.

- சுட்டி விகடன் 16-03-08

No comments:

Post a Comment