Wednesday 28 August 2024

EMIS’ பணி - ஆசிரியர்கள் மகிழ்ச்சி

 EMIS’ பணி - ஆசிரியர்கள் மகிழ்ச்சி

TN-EMIS-School


'எமிஸ்’ பணியை ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு அதில் இருந்து இப்போது விடுதலை கிடைத்துள்ளது.

கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் வருகை மற்றும் மாணவர்களின் சேர்க்கை விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது.

எந்த பள்ளியில் எவ்வளவு பேர் படிக்கிறார்கள். மாணவர்கள் எத்தனை பேர் தினமும் வருகிறார்கள். எத்தனை ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். எத்தனை ஆசிரியர்கள் எந்த பள்ளியில் வேலை செய்கிறார்கள். பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் ஆசிரியர்களின் செயல்பாடுகள், மாணவர்கள் பள்ளியில் இருந்து விலகி வேறு பள்ளியில் சேருவது உள்பட பல்வேறு தகவல்களை அரசால் ஒரு பட்டனை தட்டினாலே பார்க்க முடியும்.

இதற்காக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) என்ற இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கி இருக்கிறது. முதலில் ஆசிரியர்களுக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்றால், மாணவர்களின் வருகைப்பதிவை செய்தால் போதும் என்று ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகு பள்ளி கல்வித்துறையின் அத்தனை செயல்பாடுகளும் இந்த 'எமிஸ்’ தளத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆனது.

இதனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் தினமும் கையாளுகிறார்கள். இதனால் அவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விரை தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

இந்தநிலையில் அண்மையில் முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழி கூட்டம் நடந்து முடிந்தது. இதில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (தொழிற்கல்வி) கலந்து கொண்டு பல்வேறு அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை, நேர்முக உதவியாளர்களுக்கு வழங்கினார்.

அதன்விவரம் பின்வருமாறு: “அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும் போது கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரியவருகிறது. ஆகையால் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பனியினை ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் இதுவரை 100 சதவீதம் முழுமையாக பதிவேற்றம் செய்யவில்லை.

இதனால் அரசு செயலாளர் மற்றும் இயக்குனரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.பல நாட்களாக கடுமையான பணிச்சுமையில் இருந்த ஆசிரியர்களுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment