Thursday 29 August 2024

15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்

 


15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்

ஒருங்கிணைந்த 

 கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பணியாற்றி வரும் 15,000 அரசு ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு என்று தனியாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ஒருங்கிணைந்த 

 கல்வித் திட்டம் (Samagra Shiksha Scheme). இந்த திட்டம் என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்பின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு என்பது 60 சதவீதமாகும். மாநில அரசின் பங்களிப்பு என்பது 40 சதவீதமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு - மாநில அரசு சேர்ந்து ரூ.3,586 கோடியை பங்களிப்பு செய்யும்.

இந்த ரூ.3,586 கோடியில் மத்திய அரசின் பங்களிப்பு என்பது ரூ.2152 கோடியாக இருக்கும். மீதமுள்ள தொகையை தமிழக அரசு பங்களிப்பு செய்யும். இந்நிலையில் தான் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ரூ.573 கோடி வழங்கப்பட வேண்டும். இந்த தொகை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.573 கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்காமல் உள்ளது. தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தாமல் தமிழக அரசு உள்ளதால் இந்த தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக 5 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மற்றும் மும்மொழியை அறிமுகம் செய்வது உள்ளது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தாமல் உள்ளது. இத்தகைய சூழலில் தான் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தாததால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய நிதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது

அதுமட்டுமின்றி ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி, கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ஆகியவற்றையும் வழங்க முடியாத நிலைக்கு தமிழக அரசு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment